ஜினியை போன்று ஹேர்ஸ்டைலும் முகவெட்டும் கொண்ட விஜயகாந்த் ரஜினிக்கு தம்பியாக ’என் கேள்விக்கு என்ன பதில்’ என்கிற படத்தில் தான் முதன்முதலில் 101 ரூபாய் முன்பணம் வாங்கிக்கொண்டு நடித்தார். தொடர்ந்து எம்.ஏ.காஜா இயக்கிய ‘இனிக்கும் இளமை’ படத்தில் அவருக்கு வில்லன் வேடம் கிடைத்தது. விஜய்ராஜ், விஜயகாந்தாக மாறியது இந்த படத்திலிருந்துதான்.

கதாநாயகனாக இரண்டாவது படம் ‘அகல் விளக்கு’. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது, மேக்கப் எல்லாம் போட்டுவிட்டு அதிகாலை முதலே ஹீரோயினுக்காக காத்திருந்த விஜயகாந்த், காலை உணவு சாப்பிட எழுந்தபோது, அவரை தடுத்த படக்குழுவினர் மதியம் வரை காத்திருக்க வைத்துவிட்டனர். இதன் காரணமாகவே படப்பிடிப்பில் யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்றும், தான் சாப்பிடுவம் அதே உணவையே கடைநிலை பணியாளர்கள் வரை சாப்பிட வேண்டும் என்கிற முறையை கொண்டு வந்ததாக பின்னாட்களில் பேட்டி ஒன்றில் விஜயகாந்த் தெரிவித்தார்.

விஜய்காந்த் நடித்த முதல் ஐந்து படங்கள் கைகொடுக்காத நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘சட்டம் ஒரு இருட்டறை’ படம் சூப்பர் ஹிட் ஆனது. இதன் பிறகு விஜயகாந்துக்கு தொடர்ந்து ஏறுமுகம்தான். கருப்பு நிறத்தை வைத்து அவரை அவமானப்படுத்திய பல இயக்குநர்கள் அவரது ஆபீஸ் வாசலில் கால்ஷீட்டுக்காகக் காத்துக் கிடந்த நிலை உருவானது.

சினிமாவில் அவருக்காகச் சிந்தித்தவர், கதை கேட்டவர், மேனேஜராக இருந்தவர் எல்லாம் அவருடைய நண்பர் இப்ராஹிம் ராவுத்தர். சினிமா தாண்டி, ஏழை எளிய மக்களுக்கு உதவுவதையும் விஜயகாந்த் தொடர்ந்து செய்து வந்தார். தன்னை தேடி வந்து உதவி கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாத மனம் படைத்தவர் என்று அவருடன் பணியாற்றிய சக கலைஞர்கள் பலரும் இன்று வரை சொல்வதை பார்க்கமுடியும்.

விஜயகாந்த் நடித்த ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘உழவர் மகன்’, ‘புலன் விசாரணை’ ஆகியவை வெள்ளி விழா கண்டன. ரஜினி, கமல் உச்சத்தில் இருந்த காலகட்டத்திலேயே தனக்கென ஒரு பாணியை உருவாக்கி இருவருக்கும் கடுமையான டஃப் கொடுத்தவர் விஜயகாந்த். ரஜினி, கமல் உள்ளிட்ட பெரிய நடிகர்கள் அனைவருக்கும் 100வது படம் சறுக்கியபோது, விஜயகாந்தின் 100வது படம் ’கேப்டன் பிரபாகரன்’ பெரும் ஹிட்டடித்தது.

படப்பிடிப்பு தளங்களில் ஹீரோவுக்கு என்ன சாப்பாடோ அதுவே லைட்மேன் உள்ளிட்ட கடைநிலை பணியாளர்களுக்கு தரப்பட வேண்டும் என்ற திட்டத்தை தனது படங்களின் படப்பிடிப்பின்போது கொண்டு வந்தவர். அது மட்டுமின்றி பணியாளர்கள் அனைவருடனும் சேர்ந்து சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவர்.